2020: Citizenship Of Kerala Tamilians

Updated : Jan 03, 2020 16:57
|
Editorji News Desk
2020இல் கேரளத் தமிழர்களின் குடியுரிமை? 2020இல் கேரளத் தமிழர்களின் குடியுரிமை? ச.அன்வர் கிழக்கிலிருந்து மேற்கு வரை... வடக்கிலிருந்து தெற்கு வரை... எல்லாம் விவாதிக்கப்பட்டாயிற்று. மதம், சாதி, இனம், நிலம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்று தமிழன் விவாதிக்காத பொருளே இல்லை இன்று. பாலஸ்தீனத்திலிருந்து பர்மா வரை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆய்ந்து சமூக வலைதளங்களில் நம்முடைய ஆதங்கங்களைக் கொட்டித்தீர்க்கிறோம். ஆனால், கூப்பிடு தூரத்தில் கையறு நிலையில் செய்வதறியாது எதிர்காலம் குறித்து திகைத்து நிற்கும் கேரளத்தில் வாழும் நம் தொப்புள்கொடி உறவுகளைக் கவனமாக மறந்துவிட்டோம். 12 ஆண்டுகள் வாழ்ந்தால் போதும் இங்கிலாந்தில் ஒருவனால் குடியுரிமை பெற்றுவிட முடியும். ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் இன்னொரு மாநிலத்தில் 139 ஆண்டுகளாக வாழும் ஒரு தமிழனால் அவனுடைய வாழ்க்கைக்குத் தேவையான எதையும் பெற முடியாத அவலநிலை இன்றளவும் நீடிக்கிறது. சொந்த மண்ணில் அகதியாவதைவிட பெருஞ்சோகம் வேறெதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். 1874ஆம் ஆண்டு அன்றைய மதுரை மாவட்டத்துக்குள் தான் பணிக்குச் சென்றார்கள் எம் தமிழ் மக்கள். அன்றைக்கு திருவிதாங்கூர் சமஸ்தானமோ, கொச்சி சமஸ்தானமோ, சொந்தம் கொண்டாடாத பகுதியில்தான் தேயிலை சாகுபடிக்காகப் பயணித்தார்கள் எம் தமிழ் நிலத்து அப்பாவிகள். ரத்தம், சதை, வியர்வை, உயிர் என வர்ணங்கள் நான்குக்கு ஈடாக, உடலில் அத்தியாவசியமான நான்கு வகை உயிரீகங்களை ஒன்றரை நூற்றாண்டுகளாக இழந்து தவித்தவர்கள், நெருக்கடி முற்றி இன்று தாய் மண்ணை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பித்து விட்டார்கள். பழைய தமிழகத்தில் சிக்கிக்கிடந்த நெடுமங்காடு, நேரிய மங்கலம், பாலக்காடு, சித்தூர், கொழிஞ்சாம்பாறை, அட்டப்பாடி, பழைய கொல்லம், ஆரியங்காவு வனப்பகுதிகள், தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்கள், பழைய பூஞ்ஞார், குட்டிக்கானம், கெவி, வண்டிப் பெரியாறு, வண்டன்மேடு உள்ளிட்ட ஆயிரத்தி அறுநூறு சதுர கிலோமீட்டர் பகுதிகளில்தான் இன்று தமிழன் அகதியாகிக் கிடக்கிறான். திருவனந்தபுரம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 22 விழுக்காடு வாழும் பழைய தமிழர்கள் மெல்ல மெல்ல மலையாளிகளாக உருமாற்றம் அடைந்த அவலமும் கடந்த நூறாண்டுகளில் அரங்கேறியிருக்கிறது. வாழ்வா, சாவா என்ற இரண்டு கேள்விகளுக்கு முன்னால், வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்கள் தப்பிப் பிழைத்துக்கொண்டார்கள். என் இனம் பெரிது, மானம் பெரிது என்று நினைத்தவர்கள் சன்னம் சன்னமாக பொலிவிழந்து, வாழ வழியற்று புலம்பெயர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னால் கேரள அமைச்சரவையில் நீல லோகிததாசன் நாடார் என்று ஒரு தமிழன், அமைச்சராக ஆகும் அளவுக்கு அந்தஸ்து பெற்றிருந்த சமூகம், கால ஓட்டத்தில் தேவிகுளம் ராஜேந்திரன் மட்டுமே போதுமென்று புளங்காகிதம் அடைந்து நிற்கிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நேமம் சட்டமன்றத் தொகுதியில் பத்தாயிரம் எண்ணிக்கையில் ஆரம்பிக்கும் தமிழர் ஜனத்தொகை வட்டியூர்காவு சட்டமன்றத் தொகுதியில் பதினைந்து ஆயிரமாகப் பெருகி, கொட்டாரக்கரா, புனலூர், பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இருபது ஆயிரத்தைத் தொடுகிறது. பத்தனம்திட்டா சட்டமன்றத் தொகுதியில் அதுவே இருபத்திரண்டு ஆயிரமாக உயர்ந்து, தேவிகுளம், பீர்மேட்டில் எண்பது ஆயிரத்தை தாண்டி நிற்கிறது. இது பாலக்காடு மற்றும் சித்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஐம்பத்திரண்டு ஆயிரத்துக்கும் குறைவாக சரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் முறையே, கிட்டத்தட்ட அறுபது தொகுதிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டிருக்கிறது தமிழர் எண்ணிக்கை. கணக்குப்படி பார்த்தால் காசர்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். சராசரியாக 58 லட்சம் மக்கள்தொகையை தனதாகக்கொண்டிருக்கும் கேரளத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கேரள மாநிலம் கொடுத்த உரிமைகள் என்னவென்று பார்த்தால் வெறும் முட்டை மட்டுமே. 1956 மொழிவழி பிரிவினைக்குப் பிறகு, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த 1400 சதுர கிலோமீட்டர் பரப்பு மலையாள நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்டது. பிறகு இன்று வரை அவர்கள் 200இல் இருந்து 400 சதுர கிலோமீட்டர் வரை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டு காலங்கள் அந்த மண்ணின் பூர்வக்குடி மக்களாக அவர்கள் வாழ்ந்தும் அவர்களுக்கான சாதிச்சான்றை கேரள அரசு தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் கிட்டத்தட்ட 32,000 தமிழர்கள் சொத்துரிமை உள்ளவர்களாக கடந்த 2010ஆம் ஆண்டுவரை இருந்தார்கள். அதற்குப் பிறகு அவர்களிடம் கேரள வருவாய்த் துறை நிலவரி வசூலிக்கவில்லை. அப்பாடி பகுதியில் எங்கோ ஊடுருவியிருக்கும் மாவோயிஸ்டுகளை தேடுகிறேன் என்ற போர்வையில் அதிகமான சொத்து வைத்திருக்கும் தமிழ் விவசாயிகளைக் குறிவைத்து கேரள தண்டர்போல்ட் படை செயல்படுவதுதான் கொடூரத்தின் உச்சம். தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் 139 ஆண்டுகளாக தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வாழும் தமிழ் மக்களுக்கு உரிமை என்று சொன்னால் பிரிட்டிஷ்காரன் அவர்களுக்குக் கட்டிக் கொடுத்த அந்த அரதப்பழசான வீடு மட்டும்தான். இன்னமும் தேவிகுளம் தாலுகாவில் மலை உச்சியில் உள்ள குண்டுமலை மற்றும் சோத்துப்பாறை தேயிலைத் தோட்டங்களில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் மூணாறைக்கூட காணவில்லை என்பதுதான் பெரும் சோகம். கொஞ்சம் கொஞ்சமாக தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் ஊடுருவ ஆரம்பித்த மலையாளிகள் இன்று கிட்டத்தட்ட 75 விழுக்காடு நிலங்களில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இருக்கிறார்கள். இடுக்கி மாவட்டம் முன்னொரு காலத்தில் தமிழர்கள் நிறைந்து கிடந்த மாவட்டம். இன்று அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி, தங்கள் இடங்களை மலையாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உமாநாத், பாப்பா உமாநாத், உ.வாசுகி, வி.பி.சிந்தன், விக்ரமன் நாயர் என்று மலையாள நாட்டிலிருந்து வந்த அத்தனை இடதுசாரிகளையும் அரவணைத்து தமிழகச் சட்டமன்றத்துக்கு அனுப்பிவைத்த நாம் எங்கே? தேவிகுளம் ராஜேந்திரன் மட்டும் போதும் வேறு யாரும் எங்களுக்கு தேவையில்லை என்று பாராமுகம் காட்டும் கேரளத்து இடதுசாரிகள் எங்கே? இலங்கையிலிருந்து மட்டுமே அகதிகளை வரவேற்ற நாம், இனி இடுக்கியிலிருந்தும் வரவேற்க தயாராவோம். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் கேரளத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு நிவாரணம் தரப்போகிறேன் என்ற போர்வையில் தோழர் பினராயி செய்த காரியம், எதிர்காலத்திலும் தமிழர்களுக்கு அங்கு வேலை இருக்கப் போவதில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது. பிரபல அறிவியலாளராக அறியப்பட்ட நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் அவர்களை விசாரணை அதிகாரியாகக்கொண்டு தமிழ் மக்களின் குறைகளைத் தீர்க்க போகிறேன் என்று பாலக்காட்டில் உள்ள சிவில் ஸ்டேஷனில் ஒரு விசாரணையைத் தொடங்கி தமிழர்களின் நூறு ஆண்டு தேவைகளை ஒரு நபர் கமிஷனில் முடித்துவைக்க நினைப்பதுதான் உச்சகட்ட அவமானம். கடந்த பத்தாண்டுகளில் இருந்த நிலைமை 2020இல் ஆவது மாறுமா என்று நாம் கண்ட கனவுகளை உடைத்து நொறுக்கி இருக்கிறது நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன். இலங்கையின் நுவரெலியாவில் இருந்து ஐந்து லட்சம் தமிழர்களை சாஸ்திரியின் ஒப்புதலோடு கப்பல்களில் ஏற்றி இறக்கி நீலகிரி மாவட்டம் முழுவதும் அந்த அப்பாவிகளை தங்கவைத்தது போல், இப்போது தங்கவைக்க இடம் ஏதுமில்லை. அவர்கள் அந்த மண்ணில் வாழ்வதற்கான அத்தனை உரிமைகளையும் பெறுவதற்கு நாம் குரல் கொடுப்போம்!

Recommended For You

editorji | Partners

MPs talking about Rajinikanth in parliament

editorji | Partners

Is Prashanth Kishor grabbing the power of DMK District Secretaries?

editorji | Partners

What Happen To Vadivelu? | Minnambalam.com

editorji | Partners

Durka Stalin House was Sieged By DMK cadres

editorji | Partners

Job Recruitment: UPSC Invites Online Applications