Durka Stalin House was Sieged By DMK cadres
Updated : Jan 08, 2020 15:10
|
Editorji News Desk
துர்கா ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட திமுகவினர்!
துர்கா ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட திமுகவினர்!
சீர்காழி ஒன்றிய சேர்மன் பதவிக்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த ஒருவரை விட்டுவிட்டு, திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலின் சிபாரிசின் பேரில் வேறு ஒருவர் தலைவராக ஏற்பாடுகள் நடப்பதாக திமுகவினர் குமுறுகிறார்கள். இதற்காக இன்று (ஜனவரி 8) காலை நூற்றுக்கணக்கான திமுகவினர் சீர்காழி அருகே இருக்கும் திருவெண்காட்டில் இருக்கும் துர்கா ஸ்டாலின் வீட்டின் முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை வடக்கு மாவட்டத்தில் இருக்கும் சீர்காழி ஒன்றியத்தில் மொத்தம் 21 கவுன்சில் இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 9 இடங்களை திமுக கைப்பற்றியிருக்கிறது. அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் ஜெயித்துள்ளனர். சுயேச்சைகளில் சிலர் ஆதரவுடன் திமுகவுக்கு ஒன்றிய சேர்மன் பதவி கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த ஒன்றியம் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர் இருக்கும் ஒன்றியம் என்பதால் இதில் திமுகவை தோற்கடித்தே தீருவது என்று கங்கணம் கட்டி இறங்கியிருக்கிறார் அமைச்சர் ஓ.எஸ். மணியன். அதற்காக சுயேச்சைகளுக்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும் தரத் தயாராகி வேட்டை நடத்தி வருகிறது அதிமுக. இந்த நிலையில் ஒன்றியத்தில் அதிக கவுன்சில்களில் திமுக ஜெயிக்கும் பட்சத்தில் நாகை வடக்கு மாவட்டப் பொருளாளராக இருக்கும் ரவியை சேர்மன் ஆக்குவது என்று கட்சியில் ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் ரவிக்கும் தெரியப்படுத்தப்பட்டு அவர்தான் உள்ளாட்சித் தேர்தல் செலவுகளையே மேற்கொண்டார் என்கிறார்கள் லோக்கல் திமுகவினர். இவர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். பூம்புகார் ஒன்றிய கவுன்சிலராக இப்போது வெற்றிபெற்றிருக்கிறார். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் திமுக அதிக இடங்களில் வென்றுள்ள நிலையில் சுயேச்சைகளின் ஆதரவோடு சேர்மன் பதவியை கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்துவந்தார் ரவி. ஆனால், திடீரென இப்போது மேலையூரில் ஜெயித்த திமுக கவுன்சிலரான முத்து தேவேந்திரனை ஒன்றிய சேர்மன் ஆக்கப் போவதாகவும், துர்கா ஸ்டாலின் அவரையே சிபாரிசிப்பதாகவும் சீர்காழி திமுகவில் நேற்று முதல் தகவல் பரவியது. இதைக் கேள்விப்பட்டு மாவட்டப் பொருளாளரான ரவி அதிருப்தி அடைந்துவிட்டார். இந்நிலையில் இன்று (ஜனவரி 8) காலை திருவெண்காட்டில் இருக்கும் துர்கா ஸ்டாலின் வீட்டின் முன்பாக ரவியின் ஆதரவாளர்களும் மீனவர் சமூகத்தினரும் நூற்றுக் கணக்கில் திரண்டனர். தகவல் அறிந்து அங்கே மாவட்ட செயலாளரான நிவேதா முருகன் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ”ஒன்றிய சேர்மன் தேர்வில் துர்கா ஸ்டாலின் தலையிடக் கூடாது” என்று அங்கே கூடிய திமுகவினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
Recommended For You