வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக கரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை மார்ச் 27 பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த குற்றப் பத்திரிகையில் அப்போதைய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
மத்திய குற்றப் பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2011- 2015 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெற்றுத் தருவதில் அதிகாரிகளுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய குற்றப் பிரிவின் இறுதி விசாரணை அறிக்கையில், “போக்குவரத்துக் கழக மேலாளர்களின் துணையோடு விண்ணப்பதாரர்களின் முழு விவரங்களையும் சேகரித்து, யார் யாருக்கு பணி வழங்க வேண்டும் என்ற புதிய பட்டியலை அந்தந்த நிர்வாக இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார். ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பியதில் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்தப் பட்டியல் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுள்ளது”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.