MLA Using Disrespectful Words To Officer In Front Of Minister |
Updated : Jan 06, 2020 13:18
|
Editorji News Desk
அமைச்சர் முன்னிலையில் அதிகாரியைத் தரக்குறைவாகப் பேசிய எம்.எல்.ஏ!
அமைச்சர் முன்னிலையில் அதிகாரியைத் தரக்குறைவாகப் பேசிய எம்.எல்.ஏ! புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்ட விழாவில், அரசு அதிகாரியை அதிமுக எம்.எல்.ஏ தரக்குறைவாக பேசி மேடையிலிருந்து இறங்கச் சொல்லியது அரசு அதிகாரிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசுத் தரப்பில் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை நகரம் காமராஜபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பரிசுப் பொருட்களை வழங்கினார். இந்த விழாவில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ ஆறுமுகம், அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ நெடுஞ்செழியன் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர். மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலி பரிசுகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மேடையிலிருந்த எம்.எல்.ஏ ஆறுமுகம், அக்பர் அலியைக் கீழே இறங்கு என ஒருமையில் பேசியுள்ளார். குன்றாண்டார் கோயில் ஒன்றியக் குழு மூன்றாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு வெற்றியை அறிவித்ததாகக் குற்றம்சாட்டிய ஆறுமுகம், அக்பர் அலியை மேடையிலிருந்து கீழே இறங்கும்படி கத்தியுள்ளார். இதனால் செய்வதறியாது நின்ற அக்பர் அலி மேடையிலிருந்து கீழே இறங்கினார். அதுபோன்று மேடையிலிருந்த பாஸ்கரும் அதிகாரியை வசைபாடியுள்ளார். குன்றாண்டார் கோயில் 3ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர் செல்வமும், அதிமுக வேட்பாளர் முத்துசுப்ரமணியும் போட்டியிட்டனர். இதில் திமுக வெற்றி பெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது அங்கிருந்த ஆறுமுகம் திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெற்றி சான்றிதழ் கொடுக்க கோரி ஆட்சியரிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து தேர்தல் அதிகாரியாக இருந்த அக்பர் அலி திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். இந்த கோபத்தை வைத்தே மேடையில், அமைச்சர் முன்னிலையில் அரசு அதிகாரியை தரைகுறைவாக பேசியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ ஆறுமுகம். இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், “உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றியை மறைக்க ஒத்துழைக்காத அரசு அதிகாரி அக்பர் அலியை, புதுக்கோட்டை அரசு விழாவில் மேடையிலேயே அதிமுக எம்.எல்.ஏ, நகரச் செயலாளர் இழிவுபடுத்தி உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியினர் ஆடியுள்ள மிரட்டல் தாண்டவத்திற்கு இதுவும் ஓர் உதாரணம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended For You