கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு பிரமாணப் பத்திரத்தில் தனக்கு இருக்கும் சொத்து மதிப்பு விவரங்களை கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கதல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்த நிலையில் இன்று பலர் அவர்களது தொகுதியில் வேட்புமனு தாக்கதல் செய்தனர். முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சீமான், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக களம் காணும் கமல்ஹாசனும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயக கடமையினை கட்சி தலைவனாக செய்யும் அரிய வாய்ப்பினை தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கின்றது. இது என் முதல் தேர்தல். என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மைதான், எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம இருக்காது. எங்களின் திட்டத்தையும் செழுமையும் நம்பியே களமிறங்கி இருக்கின்றோம் என்றார்.கமல்ஹாசன் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 45 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 178 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனக்கு கடனாக 50 கோடி ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.