Nellai Kannan Bail Petition Got Rejected | Minnambalam.com
Updated : Jan 04, 2020 12:53
|
Editorji News Desk
அமித்ஷாதான் புகார் கொடுக்க வேண்டும்: நெல்லை கண்ணன் வழக்கில் திருப்பம்!
அமித்ஷாதான் புகார் கொடுக்க வேண்டும்: நெல்லை கண்ணன் வழக்கில் திருப்பம்!
அமித் ஷாவின் சோலியை முடிக்கமாட்டேங்கியலே என்ற பேச்சுக்காக பேச்சாளர் நெல்லை கண்ணன் நெல்லை நீதிமன்ற உத்தரவால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜனவரி 2 ஆம் தேதி நெல்லை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் கண்ணனை ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர் போலீஸார். அன்றே அந்த நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நேற்று (ஜனவரி 3) ஆம் தேதி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நீதிபதி கடற்கரை செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நெல்லை கண்ணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்கே தவறு. 506/1 என்ற பிரிவில் புதிய வழக்கையும் போட்டார்கள். அது அதைவிட தவறு. ஒருவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார் என்பதற்கான சட்டப் பிரிவு இது. இந்த பிரிவின் படி யார் மிரட்டப்பட்டாரோ அவர்தான் புகார் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் நெல்லை கண்ணன் மிரட்டியதாக சொல்லப்படும் நபர் (அமித் ஷா அல்லது மோடி) புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுத்திருப்பவரை நெல்லை கண்ணன் மிரட்டவில்லை. அவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக இன்னொருவர் புகார் கொடுத்ததே தவறு. 153/ஏ என்று இன்னொரு பிரிவில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். இது இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுதல் என்பதைக் குறிக்கிறது. இதுவும் தவறானது. யாரும் நெல்லை கண்ணன் பேச்சால் மோதிக் கொள்ளவில்லை. ஏற்கனவே ராகுல் காந்தி பிரதமர் மோடியை திருடன் என்று விமர்சித்தார் என்பதற்காக அவர் மீது மானநஷ்ட வழக்கு போடப்பட்டது. அதுபோல நெல்லைகண்ணன் மீது மான நஷ்ட வழக்குதான் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கிரிமினல் வழக்கு தொடுக்க முகாந்திரமே இல்லை. எனவே ராகுல் காந்திக்கு இருக்கும் உரிமை, நெல்லை கண்ணனுக்கும் இருக்கிறது. மேலும் நெல்லை கண்ணனை நீதிமன்ற வழிகாட்டுதல் இல்லாமல் போலீஸே நேரடியாக கைது செய்திருக்கிறது. எனவே கைது செய்யப்பட்ட முறை, கைது செய்யப்பட்ட சட்டப் பிரிவுகள் இரண்டிலுமே சட்டம் மீறப்பட்டுள்ளது.நெல்லை கண்ணனுக்கு 79 வயதாகிறது. சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு எதிராக இதுவரை வேறு எந்த வழக்கும் இல்லை. எனவே அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்று வாதாடினார்கள். அரசுத் தரப்பு வழக்கறிஞர் பாரதி ஆஜராகி, நீதிமன்றத்திடம் ஒரு அறிக்கையை மட்டுமே சமர்ப்பித்தார். புகார் தாரர் தயாசங்கர் சார்பாக ஆஜாரான வழக்கறிஞர், “நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் அளித்தால் அது இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதல் செய்வதாக ஆகிவிடும். இன்னும் பலர் இதுபோல பேச ஆரம்பிப்பார்கள். அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே அவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும்”என்று வாதாடினார். வாதங்களைக் கேட்ட நீதிபதி கடற்கரை செல்வம், நெல்லை கண்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா நம்மிடம், “ஜாமீன் மறுக்கப்பட்டதற்கான காரணம் தீர்ப்பு நகல் கிடைத்த பிறகே தெரியவரும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட வாய்ப்புகளை நாடுவோம்”என்று கூறியிருக்கிறார். ஜே.எம்.2 நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நெல்லை செஷன்ஸ் நீதிமன்றத்தை நாடுவது, பின் தேவைப்பட்டால் மதுரை உயர் நீதிமன்றம் செல்வது என்பதே நெல்லை கண்ணன் தரப்பினரின் திட்டமாக இருக்கிறது.
Recommended For You