சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்டமாக சென்னை காமராஜர் சாலையில் மெரீனா கடற்கரையில் 9.09 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் ஜெயலலிதா அடிக்கடி சொல்லும் வார்த்தையான மக்களால் நான் மக்களுக்கான நான் என்ற வார்த்தை அவரது நினைவிட முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.. இந்த நினைவிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது.இந்த நினைவிடத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஜெயலலிதா நினைவிடம் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. இத்துடன் எம்.ஜி.ஆர். சமாதி முழுவதும் புதுப்பிக்கப்பட்டு கட்டுமான பணிகளும் செய்யப்பட்டன.ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி பூங்கா, புல்வெளி, நீர் தடாகங்கள் அமைக்கப்பட்டன. ஒட்டு மொத்த கட்டுமான பணிகளுக்கு ரூ.79 கோடியே 75 லட்சம் செலவிடப்பட்டது. இதற்கான இறகுகள் துபாயில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு வரப்பட்டன. ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை கொண்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கான அலங்கார செடிகள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டன.நினைவிடத்தின் முகப்பு பகுதியில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சூரிய சக்தி மின்சார பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லாலான நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது.