What Happen To Vadivelu? | Minnambalam.com
Updated : Jan 08, 2020 18:59
|
Editorji News Desk
வழக்கு :வடிவேலு நிலை என்ன?
வழக்கு :வடிவேலு நிலை என்ன?
‘எலி’ பட தயாரிப்பாளரின் வீட்டிற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாக நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ‘சிட்டி பில்டர்’ என்னும் பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ்குமார். மதுரை மூன்று மாவடி பகுதியில் வசித்து வரும் இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்துவருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு நடிகர் வடிவேலு நடித்திருந்த ‘எலி’ என்னும் படத்தை அவர் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக தனக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சதீஷ்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுவிற்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தப் பிரச்னை பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த நிலையில், வடிவேலு அடியாட்களை அனுப்பி சதீஷ்குமாரின் வீட்டை அடித்து நொறுக்கியதாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி சதீஷ்குமார் சென்னை சென்றிருந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் இரு நபர்களை அழைத்துக் கொண்டு சதீஷ்குமார் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு ரகளையில் ஈடுபட்ட அவர்கள் வேலை நிமித்தமாக அங்கு வந்திருந்த சதீஷ்குமாரின் கட்டுமான நிறுவன மேலாளர் கோவிந்தராஜை மிகக் கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும், கடுமையாகத் தன்னைத் தாக்கியதாகவும் கூறி கோவிந்தராஜ், மதுரை மாநகர கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களிடம் எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ‘எங்கள் அண்ணன் வடிவேலு தான் எங்களை அனுப்பி பணம் கேட்க சொன்னார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால் சதீஷ்குமார் வண்டியில் செல்லும்போது தண்ணீர் லாரியை ஏற்றி கொலை செய்துவிடுவோம்’ என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று சதீஷ்குமாரின் வீட்டிற்கு மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் வந்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகளின் ஆதாரத்துடன் தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று வடிவேலு தான் இந்தத்தாக்குதலுக்கு காரணமானவர் என்று விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் சதீஷ்குமார், இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க இன்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended For You