டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சி ரிசல்ட் - எடப்பாடி ரியாக்ஷன்
டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சி ரிசல்ட் - எடப்பாடி ரியாக்ஷன்
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் விடிய விடிய வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தலை எப்பாடுபட்டாவது நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று தடுக்கப் பார்த்தது திமுக. ஆனாலும் உச்ச நீதிமன்றம் தேர்தலைத் தடுக்காத நிலையில் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக அதுவும் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து எடப்பாடி மிக நம்பிக்கையாகவே இருந்தார். ஒவ்வொரு மாவட்டச் செயலாளர், அமைச்சரிடம் அவர் தேர்தல் நாளன்றே பேசியதில், ‘இடைத் தேர்தல் மாதிரியே முழுசா நமக்கு வந்துவிடும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் வர வர எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றுமே புரியவில்லை. கட்சி சின்னத்தில் போட்டியிட்ட ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் தேர்தல்களில் அதிமுகவுக்கு இணையாக முன்னிலை வகித்த திமுக ஒரு கட்டத்தில் அதிமுகவை முந்தத் தொடங்கியது. குறிப்பாக எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுக கடுமையான தோல்வி முகத்தில் இருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் திமுகவே அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருவதைக் கண்டு எடப்பாடி கடுமையான அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று மாலை அதிமுக தலைமைக் கழகம் வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடமும், சென்னை மாவட்டச் செயலாளர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் எல்லாம் அந்தந்த மாவட்டங்களில் இருந்ததால் வரவில்லை. அந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ‘என்கிட்ட அமைச்சர்கள் எல்லாம் சொன்னது ஒண்ணு... ஆனா நடக்குறது ஒண்ணு. எவ்வளவோ செலவு பண்ணினோம். ஆனால் எல்லாம் எங்கே போச்சு? ஒழுங்கா போய் சேர்ந்துச்சா இல்லையா? இப்ப பல இடங்கள்ல திமுக ஜெயிச்சுக்கிட்டிருக்கு’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். அதன்பின் முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம், ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்த தாமதப்படுத்த வன்முறையை ஏற்படுத்த திமுக திட்டமிடுதுன்னு தேர்தல் ஆணையத்துக்கிட்ட புகார் கொடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களை முற்று முழுதாக நிற்க வைத்து ஜெயிக்க வைப்பதன் மூலம் ஆட்சியை மட்டுமல்ல; அதிமுக என்ற கட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டம். அதாவது தனது ஆதரவாளர்களை முழுதாக உள்ளாட்சிப் பதவிகளில் அமர்த்தி அதன் மூலம் பொதுக்குழுவிலும் அவர்களது எண்ணிக்கையை உயர்த்தி கட்சியின் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டம். ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது என்றால் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அதிமுக பெற்ற வெற்றியைகூட எடப்பாடியின் சேலம் மாவட்டத்தில் பெறவில்லை. இந்தக் காரணம்தான் எடப்பாடியைக் கடுமையான அப்செட் ஆக்கியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தோற்கவில்லை, கட்சியிலும் பன்னீரிடம் தான் தோற்றுவருவதாக நினைக்கிறார் எடப்பாடி. அதனால்தான் உடனடியாக இரவே ஆளுங்கட்சி சார்பில் பொன்னையனை தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி, ‘வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த திமுக சதி செய்கிறது’ என்று புகார் கொடுக்க வைத்திருக்கிறார். இதற்குப் பின் தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாகத் தீவிரமாகச் செயல்படக் கூடும் என்பதை உணர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு 11.30 மணிக்குத் தேர்தல் ஆணையம் போய் பல இடங்களில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக புகார் அளித்திருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிடம் அதிமுக தோல்வியைத் தழுவியதாகத்தான் செய்திகள் வருகின்றன. ஆனால் அதிமுகவுக்குள்ளோ உட்கட்சி ரீதியாக இனி பன்னீர் கை ஓங்கும், பன்னீரிடம் எடப்பாடி தோல்வி அடைந்துவருகிறார் என்ற கருத்து வலுத்துக் கொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.