டிஜிட்டல் திண்ணை: மதுரையை மிஞ்சிய சென்னை ஜல்லிக்கட்டு!
டிஜிட்டல் திண்ணை: மதுரையை மிஞ்சிய சென்னை ஜல்லிக்கட்டு!
மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் மதுரை காட்டியது.
“ஜல்லிக்கட்டு என்றாலே சட்டென நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்கள்தாம். தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்தாலும் அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளே நினைவில் நிற்கும். ஒவ்வொரு வருடமும் இந்த ஊர்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் குழுவினர் முதல்வரை நேரில் சந்தித்து அழைக்கும் வழக்கம் சில வருடங்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
முதல்வரை ஜல்லிக்கட்டு விழாவுக்கு அழைப்பதற்கு வரும்போது அவர்களை மதுரை மாவட்ட அமைச்சர்களான செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர்தான் அழைத்து வருவார்கள். அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்கு விழாக்குழுவினர் அமைச்சர் செல்லூர் ராஜுவையும், அமைச்சர் உதயகுமாரையும் ஜனவரி பிறந்ததிலிருந்தே அணுகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைச்சர்கள் இருவரும் உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டனர். உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் வந்த பிறகும் இரு அமைச்சர்களும் ஜல்லிக்கட்டு குழுவினருக்குச் சரியாக ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை. ‘சிஎம்கிட்ட கேட்டுச் சொல்றோம்’ என்று அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள்.
என்ன விஷயமென்றால்... உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்தபிறகு முதல்வரிடம் இருந்து செல்லூர் ராஜுவுக்குத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 23 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக 13 இடங்களில் வெற்றிபெற்றுவிட்டது. அதிமுக 10 இடங்களில்தான் ஜெயித்துள்ளது. குறிப்பாக அலங்காநல்லூர் ஒன்றிய கவுன்சிலிலும் திமுக, காங்கிரஸை விட அதிமுக குறைவான இடங்களையே பெற்றுள்ளது. இத்தனைக்கும் எடப்பாடி எப்போது விசாரித்தாலும் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதி ஜல்லிக்கட்டு ஏரியாவில்தான் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
ரிசல்ட் வந்ததும் செல்லூர் ராஜுவுக்கு போன் போட்ட எடப்பாடி, ‘என்ன மதுரை இப்படி ஆயிடுச்சு. மதுரை பக்கம் அதுவும் கிராமப் பகுதிகள்லயே நம்மளால ஜெயிக்க முடியலைன்னா டவுன்ல என்ன பண்ணப் போறோம்? ஜல்லிக்கட்டுக்காக நாம என்னென்ன பண்ணியிருக்கோம். ஆனா ஜல்லிக்கட்டு நடக்குற ஏரியாக்கள்லயே நமக்கு ஒண்ணும் கிடைக்கலையே...’ என்று சற்று கோபமாகவே கேட்டிருக்கிறார். உதயகுமாரிடமும் இதுகுறித்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரை எடப்பாடியிடம் அழைத்துச் செல்வதில் அமைச்சர்கள் இருவருக்கும் ரொம்பவே தயக்கம். எடப்பாடியும் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரைச் சந்திப்பதை விரும்பவே இல்லை என்கிறார்கள்.
இந்தத் தகவல் அறிந்த துணை முதல்வர் ஓ.பன்னீரின் தரப்பினர், மதுரை ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரிடம் பேசியிருக்கிறார்கள். ‘டெல்லிக்குப் போய் ரெண்டே நாளில் மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில் க்ளியரன்ஸ் வாங்கி ஜல்லிக்கட்டுக்கு வந்த தடையை உடைச்சதே நம்ம ஓபிஎஸ் அண்ணன் தானே. நியாயமா இவர்தானே ஜல்லிக்கட்டுக்கு வரணும். நீங்க இந்த வாரத்துல எப்ப வேணும்னாலும் சென்னை வந்து துணை முதல்வரை பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் இப்போது ஜல்லிக்கட்டு குழுவினர் முதல்வரைப் பார்ப்பதற்கு முன்னர் துணை முதல்வரைப் பார்க்கலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
எடப்பாடி தரப்பிலிருந்து அப்பாயின்ட்மென்ட் கிடைக்க தாமதமாகிறது என்ற தகவலைத் தெரிந்துகொண்டுதான் ஓபிஎஸ் தரப்பு தன் வாடிவாசலை ஜல்லிக்கட்டுக் குழுவினருக்காக திறந்து வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரோ, ‘மதுரையில நடக்குற ஜல்லிக்கட்டை விட சென்னையில நடக்குற ஜல்லிக்கட்டு ரொம்ப வீரியமா இருக்கும் போல’ என்று தங்களுக்குள் ஆதங்கமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ’நீங்கள் அப்பாயின்ட்மென்ட் கொடுக்காவிட்டால் அவர்கள் ஓபிஎஸ்ஸைப் பார்த்துவிடுவார்கள். அப்புறம் அதற்கும் சேர்த்து எங்களைத் திட்டக் கூடாது’ என்று அமைச்சர்கள் எடப்பாடிக்கும் தெரியப்படுத்திவிட்டார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.